×

முழு ஊரடங்கை பயன்படுத்தி டாஸ்மாக் கடையில் வசூல் வேட்டை:கேள்வி கேட்பவர்களுக்கு அடிஉதை: போலீசார் துணையோடு அராஜகம்

தாம்பரம்: ஊரடங்கு காரணமாக சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, தாம்பரம் அருகே உள்ள மண்ணிவாக்கம் பகுதியில் வண்டலூர் - மீஞ்சூர் நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை அருகே 2 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த 2 கடைகளுக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் வந்து மூட்டை மூட்டையாக மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதனால், மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், முன்னதாகவே சரக்குகளை வாங்கி வைத்துக்கொள்ள வண்டலூர் அருகே உள்ள இந்த 2 டாஸ்மாக் கடைகளில் நேற்று ஏராளமான குடிமகன்கள் குவிந்தனர். இதை பயன்படுத்தி அனைத்து மது பாட்டில்கள் மீதும் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்பட்டது. பலர் வேறு வழியின்றி கூடுதல் தொகை கொடுத்து மதுபானம் வாங்கி சென்றனர். இதுபற்றி கேள்வி கேட்டு தகராறில் ஈடுபடும் குடிமகன்களை சமாளிக்க பார் உரிமையாளர்கள் ஓட்டேரி காவல் நிலையத்தைச் சேர்ந்த தங்கமணி என்ற போலீசாரை அங்கு பாதுகாப்பு பணியில் அமர்த்தி உள்ளனர்.
இவர், தினசரி இங்கு வந்து தனது பைக்கை டாஸ்மாக் கடை வளாகத்தில் நிறுத்திவிட்டு, தனது தொப்பியை அதன்மீது வைத்துவிட்டு, மப்டியில் நின்று கொண்டு, கூடுதல் கட்டணம் குறித்து கேள்வி கேட்கும் குடிமகன்களை லத்தியால் தாக்கி, அங்கிருந்து விரட்டி வருகிறார்.

இதற்காக, பார் உரிமையாளர்கள் இவருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு, தினசரி அவரையே பாதுகாப்பு பணிக்கு அழைப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் பாலாஜியிடம் கேட்டபோது, ‘‘டாஸ்மாக் கடைகளுக்கு காவல் நிலையத்திலிருந்து மப்டியில் போலீசார் யாரையும் அனுப்புவதில்லை. தங்கமணி என்பவருக்கு டாஸ்மாக் கடையில் டியூட்டி போடவே இல்லை. ஆனால் எதற்கு அவர் அங்கு மப்டியில் பணியில் ஈடுபடுகிறார் என தெரியவில்லை, அவர்மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

ஓட்டேரி காவல் நிலைய எஸ்ஐ மோகன் கூறுகையில், ‘‘குடிபோதையில் யாராவது போலீசார் என்று கூறி குடிமக்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டிருப்பார்கள், மதுபான கடையில் நிற்கும் இருசக்கர வாகனம் தங்கமணி என்ற போலீசாருக்கு உடையதுதான். ஆனால் அவருக்கு அங்கு பணி வழங்கவில்லை. அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்றும் தெரியவில்லை,’’ என்றார்.

Tags : questioners , Full curfew, task shop, cops
× RELATED ‘மாமா என்று அழைக்க வேண்டும்’ என இளம்பெண்ணை சீண்டிய வாலிபர் கைது